Tuesday, August 4, 2009

கோழிகுத்தி ஸ்ரீ வானமுட்டி பெருமாள்

மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில், மயிலாடுதுறையிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு சிறு கிராமம் தான் கோழிக்குத்தி. நாகபட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் சோழன்பேட்டை கிராமத்தை சேர்ந்த இந்த ஊரில் தான் அருள்மிகு ஸ்ரீ வானமுட்டி பெருமாள் என்கிற ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் உள்ளது.

கஞ்சனூர் சுக்கிரபகவானை தரிசித்த பின்னர் நேராக இந்த ஊருக்கு வந்து ஸ்ரீ வானமுட்டி பெருமாளை தரிசிக்கும் பாக்கியத்தை பெற்றோம். நாங்கள் சென்ற நாளிலிருந்து மூன்று தினங்களில் (21/06/2009) சம்வஸ்திரா அபிஷேக விழா (இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேகம்) நடைபெறவுள்ளதை அறிந்தோம்.

சுமார் 12 அடி உயரத்தில் அத்தி மரத்தாலேயே நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ வானமுட்டி பெருமாள் திருவுருவச் சிலை பிப்பல்ல மகரிஷிக்கு விஸ்வரூப தரிசனம் தந்த ஸ்ரீநிவாசர் ஆவார். 1400 வருடங்களுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டதாக கருதப்படும் இந்த திருக்கோயில் பக்தர்களுக்கு அமைதி, ஐஸ்வர்யம் மற்றும் நிறைந்த திருப்தியை அளிப்பதாக உள்ளது.

முன்னொரு காலம் பல வைத்தியர்களால் குணப்படுத்த முடியாத சரும நோயினால் பீடிக்கப்பட்ட மன்னர் ஒருவர் நோய் தீர்க்க வேண்டி மகா விஷ்ணுவை பிரார்த்தனை செய்தபொழுது அவருக்கு தரிசனம் தந்த விஷ்ணு பகவான் காவிரிக்கரையோரமாக செல்லும் பொழுது மார்க்க சகாயேசுவரர் (சிவன்) அருளால் இந்த சரும நோய் விலகும் திருத்தலத்தை அடையலாம் எனவும் அங்கு 48 தினங்கள் கோயில் குளத்தில் (புஷ்கரிணி) குளித்து பெருமாளை தரிசனம் செய்து வந்தால் நோய் வர காரணமாயிருந்த தோஷம் விலகி நோய் விலகும் என்று அருளினார். அதன் படி நடந்துகொண்ட மன்னருக்கு நோய் நீங்கியதுடன் பெருமாளின் விஸ்வரூப தரிசனமும் கிடைத்தது என்றும் இந்த மன்னரே பிற்காலத்தில் பிப்பல்ல முனிவர் ஆனார் என்றும் அறிகிறோம். சனி காயத்திரி மந்திரத்தை உருவாக்கியவர் தான் பிப்பல்ல மகரிஷி. "கோடி ஹத்தி விமோசன புரம்" என்ற பெயர் மருவி கோழிக்குத்தி ஆனதாகவும் பிப்பல்லருக்கு நோய் நீங்கிய திருத்தலம் தான் கோழிக்குத்தி எனவும் அறிகிறோம்.

வானமுட்டி பெருமாளாக காட்சி தரும் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு துணையாக ஸ்ரீ தயாலக்ஷ்மி தாயாரும் வீற்றிருக்கும் இத்திருக்கோயிலில் ஸ்ரீ யோக நரசிம்மர் மற்றும் சப்தஸ்வர ஹனுமார், இராமானுஜர், நர்த்தன கிருஷ்ணர் மற்றும் விஸ்வக்சேனர் ஆகியோர் சன்னதிகளும் உள்ளன. இக்கோயிலின் தீர்த்தத்தை விஸ்வ புஷ்கரிணி என அழைக்கிறார்கள். கோயிலின் வலப்பக்கமுள்ளது புஷ்கரிணி. இதில் ஸ்னானம் செய்வோருக்கு நோய் நொடிகள் விலகும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

No comments:

Post a Comment