Sunday, July 19, 2009

கும்பகோணம்

தமிழகத்திலுள்ள பெரும்பாலான ஊர்களில் பிரபல கோயில்கள் பல உள்ளன என்றாலும் கும்பகோணத்தின் சிறப்பு தனிப்பட்டது. "கோயிலில்லா ஊரிலே குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தமிழகத்தின் ஆத்திகர்களின் மத்தியிலே புழக்கத்தில் உள்ளது.

"தடுக்கி விழுந்தால் கோயில்" என்பது போல சின்னஞ்சிறிய "குடந்தை" அல்லது "கும்பகோணம்" என்ற ஊரில் உள்ள பிரபல கோயில்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமாகும்.

தவிர, பண்டைய சோழ நாட்டு கோயில்களை தரிசிக்க விழையும் எவரும் கும்பகோணத்தில் தங்கி இதன் அக்கம் பக்கமுள்ள கோயில்கள் ஒவ்வொன்றாக தரிசிப்பது மிகவும் சுலபமாகும். இந்த காரணத்தால் நானும் கும்பகோணதிலிருந்து எனது 2009-வது ஆண்டுக்கான ஸ்தல தரிசன பயணத்தை துவக்க முடிவு செய்து, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கும்பகோணம் ரயில் நிலையம் வரை "மலைக் கோயில் விரைவுவண்டியில்" (ஆங்கிலத்தில் Rock Fort Express) குடும்பத்தாருடன் காலை சுமார் 7:30 மணிக்கு வந்து சேர்ந்தேன். சென்னையிலிருந்து இரவு 10:30 மணியளவில் புறப்படும் இந்த இரயில் வண்டி 425 கிலோமீட்டர் பயணம் செய்து, விருத்தாசலம், திருச்சி, தஞ்சாவூர் வழியாக கும்பகோணம் வந்தடைகிறது.

18/06/2009 காலை கும்பகோணம் இரயில் நிலையத்தை அடைந்த நாங்கள், முன்னேற்பாட்டின் படி அங்கு எங்களுக்காக காத்திருந்த வாடகை கார் ஓட்டுனர் திரு குணசேகரனின் மாருதி ஆம்னி காரில் கும்பகோணம் நகரிலேயே பிரசித்தி பெற்ற "ஓட்டல் ராயாசில்" வந்து சேர்ந்தோம்.

"ஓட்டல் ராயாஸ்" என்பது கும்பகோணம் தலைமை தபால் அலுவலகம் அருகிலேயே உள்ளது. மின்னஞ்சல் வழியாக இந்த ஓட்டலில் நான் ஏற்கனவே அறை ஒன்றை எடுத்திருந்ததால் எந்தவித கஷ்டமுமின்றி வந்த உடனேயே குளித்து உணவருந்தி எங்கள் பயணத்தை துவங்க முடிந்தது.

No comments:

Post a Comment